எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பீட்டர்சன்கட்டுரைகள்

என்னுடைய உண்மை நிலையை கண்டுகொள்ளல்

நான் யார்? என்று ஒரு மங்கிப்போன, பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மை தன்னைக் கேட்டுக் கொண்டது. மைக் இங்க் பென் எழுதிய 'ஒன்றுமில்லை" என்ற குழந்தைகளின் புத்தகத்தில் இதனைக் காணலாம். ஒரு பரணின் மூலையில் தூசிபடிந்து கிடந்த அந்த மிருகத்தை அங்கு வந்த பொருட்களை அடுக்குபவர்கள் 'ஒன்றுமில்லை" என அழைத்ததால் 'ஒன்றுமில்லை" என்பதே தன்னுடைய பெயரென அது நினைத்துக் கொண்டது.

அது மற்ற மிருகங்களைச் சந்தித்த போது தன்னைப் பற்றிய நினைவைத் திரும்பப் பெற்றது. இப்பொழுது 'ஒன்றுமில்லை" தனக்கு ஒரு வாலிருந்தது, மீசை முடிகளிருந்தன, தன் உடலில் கோடுகள் வரையப்பட்டிருந்தன என்பதை நினைவு கூர்ந்தது. டாபி என்ற பூனையைச் சந்தித்தப் பின்னர் தான், தன்னுடைய வீட்டிற்கான வழியையும் தான் யாரென்பதையும் ஒன்றுமில்லையால் நினைவுபடுத்த முடிந்தது. உண்மையில் அது டோபி என்றழைக்கப்படும் ஒரு பஞ்சு பூனை பொம்மை. அதனுடைய எஜமானன் அன்போடு அதனைச் சேர்த்துக் கொண்டு, அதன் மீது புதிய காதுகளைத் தைத்தார், வாலையும், மீசை முடிகளையும், உடலின் கோடிகளையும் கொடுத்தார்.

நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம், நான் என்னுடைய அடையாளத்தைக் குறித்து சிந்தித்துக் கொள்வேன். நான் யார்? யோவான் விசுவாசிகளுக்கு எழுதும் போது, தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளென அழைப்பதைக் குறிப்பிடுகின்றார் (1 யோவா. 3:1). இந்த அடையாளத்தை நாம் முற்றிலுமாக புரிந்துகொள்வதில்லை. ஆனால், நாம் இயேசுவைப் பார்க்கும் போது நாம் அவரைப் போன்றிருப்போம் (வச. 2). டோபி என்ற அந்தப் பூனையைப் போல நாமும் நமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பெற்றுக் கொள்வோம். அந்த அடையாளம் இப்பொழுது பாவத்தால் மறைந்துவிட்டது. ஆனாலும், நாம் அந்த அடையாளத்தின் ஒரு பகுதியை நாம் தேவனுடைய சாயலாக இருப்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்க முடியும். ஒரு நாள் நாம் இயேசுவைக் காணும் போது. தேவன் நமக்கென்று வைத்துள்ள அடையாளத்தை முற்றிலும் மீண்டும் பெற்றவர்களாகக் காணப்படுவோம். நாம் புதிதாக்கப்படவோம்.

நிலையான

நான் காரின் கதவை மூடிவிட்டு, என்னுடைய பள்ளியினுள் நுழைந்த போது, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று என் தந்தை என்னிடம் கூறினார். அப்பொழுது நான் 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இதே காட்சியைத் தான் ஒவ்வொரு காலையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தோம். நாங்கள் பள்ளியை அடைந்தோம். என் தந்தை, “இன்று நல்ல நாளாயிருக்கட்டும், நான் உன்னை நேசிக்கிறேன்” என்றார். நான் “பை” என பதில் கூறிவிட்டுச் சென்றேன். என் தந்தையின் மேல் நானொன்றும் கோபத்திலில்லை, அவரைப் புறக்கணிக்கவுமில்லை. நான் என்னுடைய சிந்தனையில் மூழ்கியிருந்தேன், எனவே அவருடைய அன்பு வார்த்தைகளைக் கவனிக்கவில்லை. எப்படியிருந்தாலும் என்னுடைய தந்தையின் அன்பு விடாப்பிடியாக இருந்தது.

தேவனுடைய அன்பும் இதே போன்றுதான். உண்மையில் இதையும் விட மேலான அன்பு அது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பு. இத்தகைய அன்பினைப் பற்றி பழைய ஏற்பாட்டில், சங்கீதம் 136ல் இருபத்தாறு முறை கூறப்பட்டுள்ளது. எந்த வார்த்தையாலும் அந்த அன்பின் ஆழத்தை முழுமையாக விளக்க முடியாது. நாம் இதனை இரக்கம், அன்பு கனிந்த கருணை, கிருபை, உண்மையான அன்பு என பல வகைகளில் விளக்கலாம். இந்த அன்பு, உடன்படிக்கையோடு இணைந்த அன்பு, உண்மையும் நம்பிக்கையும் கலந்த அன்பு. தேவ ஜனங்கள் பாவம் செய்யம் போதும் தேவன் அவர்கள் மீதுள்ள அன்பில் உண்மையுள்ளவராயிருந்தார். விடாப்பிடியான அன்பு என்பது தேவனுடைய குணாதிசயத்தோடு ஒன்றியது (யாத். 34:6).

நான் குழந்தையாயிருந்த போது என்னுடைய தந்தையின் அன்பு எனக்குக் கட்டாயமாகத் தரப்படும் எனக் கருதிக் கொண்டேன். இதே போன்று இப்பொழுதும் அத்தகைய அன்பு என் பரலோகத் தந்தையிடம் உண்டு. நான் என்னுடைய தந்தையின் வார்த்தையைக் கவனிக்கத் தவறி, அவருடைய வார்த்தைக்கு பதில் கூற மறந்துவிடுகின்றேன், நன்றியோடிருக்கத் மறந்துவிடுகிறேன். ஆனாலும் என் தேவனுடைய அன்பு விடாப்பிடியாகவுள்ளது என்ற உண்மை என் வாழ்விற்கு உறுதியான அஸ்திபாரமாகவுள்ளது.

உறுதியான அடித்தளம்

சென்ற வருடம் கோடையின்போது நானும் என் கணவரும், பென்ஸில்வேனியாவின் கிராமப்புறத்தில் உள்ள, ஃப்ராங்க் லாய்ட் ரைய்ட் என்ற கட்டடக்கலை நிபுணர் கட்டிய, கொட்டும் அருவி என்று பொருள்படக்கூடிய ‘ஃபாலிங் வாட்டர்’ (Falling water) வீட்டைச் சுற்றிப்பார்த்தோம். அதுபோன்ற ஒரு வீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. தரையில் இருந்து முளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வீட்டை ரைட் கட்ட நினைத்து, அதில் வெற்றியும் பெற்றார். ஏற்கனவே இருந்த ஒரு நீர்வீழ்ச்சியைச் சுற்றி அந்த வீட்டைக் கட்டினார். கட்டட வடிவமைப்பு அருகில் இருந்த பாறை வடிவங்களை ஒத்திருந்தது. எங்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டிய பெண், அந்த வீடு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கினார். “வீட்டின் நடுப்பகுதி முழுவதும் கீழே உள்ள கற்பாறைகளை அஸ்திபாரமாகக் கொண்டுள்ளது” என்றாள்.

அவளது வார்த்தைகள், இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர் கற்றுக் கொடுப்பதே அவர்கள் வாழ்க்கைக்கான அடித்தளமாக இருக்கும் என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் அவர்களுக்குக் கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்தால், எந்த சூறாவளியையும் அவர்களால் தாங்கமுடியும் என்று கூறினார். கேட்டும் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் மணலின்மேல் கட்டப்பட்ட வீட்டைப்போல் இருப்பார்கள் (மத். 7: 24-27). பின்னர் பவுலும் இதே சிந்தனைகளை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவே அடித்தளம் என்றும், நிலைத்து நிற்கக்கூடிய கிரியைகளால் நாம் அதன்மேல் கட்டவேண்டும் என்று எழுதினார் (1 கொரி. 3:11).

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, கீழ்ப்படியும்போது, நம் வாழ்க்கையை உறுதியான கற்பாறையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கிறோம். நம் வாழ்க்கையும் ஃபாலிங்வாட்டரைப் போல கற்பாறையின்மேல் கட்டப்பட்டதால் நீடித்தும், அழகாகவும் அமையும்.

முட்டாள் ஆடுகளும், நல்ல மேய்ப்பரும்

என் நண்பர் சாட் வையோமிங் பகுதியில் ஒரு வருடம் மேய்ப்பனாக இருந்தார். “ஆடுகள் முட்டாள்தனமானவை. தங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறதோ அதை மட்டும்தான் அவை சாப்பிடும்,” என்று என்னிடம் சொன்னார். “தங்களுக்கு முன்னால் இருக்கும் எல்லா புல்லையும் சாப்பிட்டு முடித்தாலும், புல் இருக்கும் வேறு இடத்தை திரும்பிக்கூட பார்க்காமல், மண்ணை சாப்பிட ஆரம்பிக்கும்.”

அவர் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். எத்தனை முறை வேதாகமம் மனிதர்களை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறது என்று நினைத்தேன். அதனால்தான் நமக்கு மேய்ப்பர் தேவைப்படுகிறார். ஆனால், ஆடுகள் முட்டாளாக இருப்பதால், ஏதோ ஒரு மேய்ப்பன் அல்ல, அவற்றின்மீது அக்கறை காட்டும் மேய்ப்பனே தேவை. பாபிலோனில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தேவனின் ஜனங்களுக்கு எசேக்கியேல் கடிதம் எழுதியபோது, மோசமான மேய்ப்பர்களால் நடத்தப்படும் ஆடுகளுக்கு அவர்களை ஒப்பிட்டார். இஸ்ரவேலின் தலைவர்கள் தங்கள் மந்தைகள்மீது அக்கறை கொள்ளாமல், அவைகளைத் தங்கள் சுயநலத்திற்காகவும், ஆதாயம் தேடுவதற்காகவும் பயன்படுத்திக்கொண்டார்கள் (வச. 3). காட்டு விலங்குகள் அவைகளைப் பட்சித்துப்போட அனுமதித்தார்கள் (வச. 5).

ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. நல்ல மேய்ப்பராகிய தேவன் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திய தலைவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற வாக்குக் கொடுத்தார். அவர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, செழிப்பான புல்வெளிகளில் மேய்த்து, அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக அவர்களுக்கு வாக்களித்தார்.  காயப்பட்டவைகளை சுகமாக்கி, காணாமல் போனவற்றைத் தேடுவார் (வச. 11-16). தம் மந்தை பாதுகாப்பாக இருக்கும்படியாக, அவர் காட்டு விலங்குகளைத் துரத்துவார் (வச. 28).

தேவனின் மந்தையில் உள்ளவர்களுக்கு அன்பான அக்கறையும், வழிநடத்துதலும் தேவை. நம்மை எப்போதும் பசுமையான புல்வெளிகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு மேய்ப்பரைப் பெற்ற நாம் அவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! (வச. 14).

பாடலோடு தன்னைச் சுடும் கழுவை எதிர்கொள்ளுல்

போதைப் பொருட்கள் கடத்தலில் சிக்கிய இரண்டுபேர், மரண தண்டனை பெற்று, பத்து ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். அவர்கள் சிறையில் இருந்தபோது, இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றி தெரிந்துகொண்டனர். கடவுள் தங்கள்மீது அன்பாய் இருக்கிறார் என்று தெரிந்தபோது, அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் தண்டனையை நிறைவேற்ற, துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு முன் அவர்கள் நிறுத்தப்பட்டபோது, அவர்கள் பரமண்டல ஜெபத்தை ஏறெடுத்து, “கிருபை, கிருபை” (Amazing Grace) என்ற பாடலைப் பாடினார்கள். கடவுள் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக, ஆவியானவரின் வல்லமை மூலம், அசாத்திய தைரியத்துடன் மரணத்தை எதிர்கொண்டனர்.  

தங்கள் இரட்சகர் இயேசுவின் உதாரணத்தை அவர்கள் பின்பற்றினார்கள். தன் மரணம் நெருங்குவதை அறிந்த இயேசு, மாலையில் சிறிது நேரம் தன் நண்பர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்திலும் அவர் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்ன பாடினார் என்பது அதிலும் விசேஷமான காரியம். அன்றைய இரவில், இயேசுவும் அவர் நண்பர்களும் பஸ்கா உணவை சாப்பிட்டார்கள். பொதுவாக பஸ்கா உணவு சாப்பிட்டதும், துதி என்ற பொருள்படும் ஹாலல் (Hallel) என்ற 113 முதல் 118 வரையான சங்கீதங்களைப் பாடுவார்கள். அன்று இரவு, மரணம் நெருங்கி இருப்பதை அறிந்த இயேசு, தன்னை சுற்றிக்கொண்ட “மரணக் கட்டுகள்” பற்றிப் பாடினார் (சங்கீதம் 116:3). ஆனாலும், கடவுளின் கிருபையைத் துதித்து (117:2), அவர் இரட்சிப்புக்கு நன்றி செலுத்தினார் (118:14). இந்த சங்கீதங்கள் சிலுவையில் அறையப்படும் முன், இயேசுவுக்கு அதிக ஆறுதலைத் தந்தன.  

மரணத்துக்கு ஒப்புவிக்கப்படுவதற்கு இயேசு தவறு எதுவும் செய்யவில்லை. ஆனாலும், கடவுள்மேல் அவர் வைத்திருந்த அதிக நம்பிக்கையின் காரணமாக, மரணத்தை எதிர்கொள்ளும்போதும், கடவுளின் அன்பைக் குறித்துப் பாடினார். எந்த விதமான சோதனைகளை நாம் சந்தித்தாலும், இயேசுவால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.  

அவர்கள் கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்தார்கள்

வீட்டிலிருந்து அதிக தூரத்திலிருந்த நகரத்திற்குப் பேருந்தில் வந்திருந்த பாப் இறங்கினார். கசகசப்பாக இருந்தது. நாள் முழுவதும் பிரயாணம் செய்ததில் மிகவும் களைப்பாக உணர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர்களின் நண்பர்கள் அந்த இடத்தில் வசித்தனர். அவர்கள் அவரை வரவேற்றபோது, அவர் மரியாதையுடன் நடத்தப்படுவதை உணர்ந்ததோடு, தன் வீட்டில் இருப்பதுபோல், சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தார்.
 
பின்னர், பழக்கப்படாத ஒரு இடத்தில் எப்படி தன்னால் அமைதியாக உணர முடிந்தது என்று யோசிக்கும்போது, அதற்கான விடை அவருக்கு 2 கொரிந்தியரில் கிடைத்தது. கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் “கிறிஸ்துவுக்காக நற்கந்தமாய்” இருப்பதாக பவுல் விவரிக்கிறார். “அதேதான்” என்று பாப் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவரை உபசரித்தவர்கள் கிறிஸ்துவைப் போல் “வாசனை கொண்டிருந்தார்கள்”.
 
கர்த்தர் தம் மக்களை கிறிஸ்துவில் “வெற்றி சிறக்கப்பண்ணி” அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துவதாக பவுல் கூறும்போது, பழங்கால வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். வெற்றி பெற்ற படையினர் தெருக்கள் வழியாக நடந்து செல்லும்போது, தூபவர்க்கம் கொளுத்துவார்கள். அந்த வாசனை, அந்தப் படையின் ஆதரவாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல், தேவனின் மக்கள், விசுவாசிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் வாசனையை எடுத்துச் செல்வதாக, பவுல் கூறுகிறார். அது நாமாக உருவாக்குவது அல்ல. கர்த்தரைப் பற்றி நாம் எடுத்துச்சொல்லும்போது, நம்மை வழிநடத்துகையில் அவர் அதை உருவாக்குகிறார்.
 
பாப் எனது தந்தை. அந்த தொலைதூரப் பயணத்தை அவர் மேற்கொண்டு, நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை அவர் அதை மறக்கவில்லை. கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்த மக்களைப் பற்றி அவர் இன்றும் பேசுகிறார்.

நம்பிக்கையோடு கூடிய புலம்பல்

பகாமாஸ் பட்டணத்தில் நாசா என்ற இடத்திலுள்ள கிளிஃப்டன் ஹெரிடேஜ் நேஷனல் பார்க்-ஐ பார்த்தோமாயின் சரித்திரத்திலுள்ள ஒரு கொடூரக்காலத்தை மீண்டும் பார்த்தது போலிருக்கும். அந்த தீவின் நிலப்பகுதியும், நீர்ப்பரப்பும் சந்திக்கும் இடத்தில், கற்களாலான ஒரு படிக்கட்டு ஒரு பாறையின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். 18ஆம் நாற்றாண்டில் இந்த பகாமாஸ்சுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட அடிமைகள் தங்கள் குடும்பத்தை விட்டு, இந்தப் படி வழியே ஏறி ஒரு மனிதாபிமானமற்ற நடத்தைக்குள்ளாக்கப்படும் வாழ்வுக்குத் தள்ளப்படுவர். அந்த மலை உச்சியில் அந்த அடிமைகளுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கேதுரு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்கள் கடலை நோக்கிய வண்ணம், தங்களுடைய தாய்நாட்டை நோக்கிய வண்ணம், தாங்கள் விட்டு வந்த தங்கள் குடும்ப நபர்களை எதிர்பார்ப்பது போல அமைந்திருக்கும். ஒவ்வொரு சிற்பத்திலும் அந்த அடிமையின் தலைவனுடைய சாட்டையின் தழும்புகள் இருக்கும்.

இப்பெண் சிற்பங்கள் தாங்கள் இழந்து போனதை நினைத்துப் புலம்புவது போன்ற காட்சி, நாம் இவ்வுலகில் நடக்கின்ற அநீதியையும், உடைந்துபோன நிலைமையையும் நினைத்துப் பார்த்து புலம்ப வேண்டியதின் அவசியத்தை எனக்கு நினைவுபடுத்தியது. புலம்பல் என்பது நம்பிக்கையை இழந்து விட்ட நிலையை மட்டும் குறிப்பதல்ல, அது தேவனோடு நாம் உண்மையாய் இருத்தலையும் குறிக்கும். இது கிறிஸ்தவர்களுக்கு நன்கு பழகிவிட்ட ஒரு நிலை. சங்கீதங்களில் சுமார் நாற்பது சகவீதம், புலம்பலின் சங்கீதங்களாகும். புலம்பல் புத்தகத்தில் தங்களுடைய பட்டணம் பிற படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதை நினைத்து புலம்புவதாகும் (3:55).

புலம்பல் என்பது வேதனையின் உண்மையான வெளிப்பாட்டை முறையாகத் தெரிவிப்பதாகும். அது தன் வேதனை, மற்றும் கஷ்டத்தின் மத்தியில் தேவனை இணைத்துக் கொள்ளும். மொத்தத்தில் புலம்பல் நம்பிக்கையைத் தரும். அநியாயத்திற்காக புலம்பும் போது, நாம் நம்மையும் பிறரையும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர செயல்படுமாறு அழைப்பதாகும்.

இதனாலேயே நாசாவிலுள்ள இந்த சிற்பத் தோட்டத்தை “ஆதியாகமம்” எனப் பெயரிட்டுள்ளனர். புலம்பலின் இடம் ஒரு புதிய துவக்கத்தின் இடமாக உணரப்படுகிறது.

அந்நியர் அந்நியரை வரவேற்றல்

நானும் என்னுடைய கணவனும் சியாட்டில் என்ற இடத்திற்கு, அவருடைய சகோதரியின் அருகிலே வாசம் பண்ணும்படி நகர்ந்த போது, எங்களுக்கு எங்கே தங்குவது, எங்கு வேலை செய்வதென்று தெரியவில்லை. அருகிலுள்ள ஒரு தேவாலயம் நாங்கள் தங்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அது ஒரு வாடகை வீடு, அநேக படுக்கையறைகளைக் கொண்டது. நாங்கள் ஓர் அறையில் தங்கிக் கொண்டு மற்றவற்றை வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்குக் கொடுக்கலாம். எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாங்கள் அந்நியரை வரவேற்கும் அந்நியராக இருந்தோம். எங்களுடைய வீட்டையும் ஆகாரத்தையும் உலகெங்கிலிருந்தும் வந்த மக்களோடு பகிர்ந்து கொண்டோம். நாங்களும் எங்கள் வீட்டில் தங்கியிருப்போரும் டஜன் கணக்கான வெளிநாட்டு மாணவர்களை ஒவ்வொரு வெள்ளி இரவும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ள அழைத்தோம்.

நம் வீட்டைவிட்டு வெகுதொலைவில் இருப்பது என்ன என்பது தேவனுடைய ஜனங்களுக்குத் தெரியும். அநேக நூற்றாண்டுகள் இஸ்ரவேலர் அந்நியராகவும், அடிமைகளாகவும் எகிப்து தேசத்தில் இருந்தனர். லேவியராகமம் 19ல் அவனவன் தன் தன் “தாயையும், தகப்பனையும் கனம் பண்ணு” “களவு செய்யாதே” (வச. 3,11) என்ற நன்கறிந்த கட்டளைகளோடு உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனை சுதேசி போல எண்ணி கவனி, ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயும் பயந்துமிருந்தீர்கள் (வச. 33-34) எனக் கூறுகின்றார்.

தேவனைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மில் அநேகருக்கு அகதிகளாக வாழ்ந்த அனுபவம் இல்லை. ஆனால், அந்த உலகில் அந்நியரைப் போல வாழ்தல் எவ்வாறிருக்கும் (1 பேத. 2:11) எனத் தெரியும், ஏனெனில் நாம் இப்பூமிக் குரியவர்களல்ல, நம்முடைய விசுவாசப் பயணம் பரலோக ராஜ்ஜியத்தை நோக்கியேயிருக்கிறது. நாம் உபசரிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். அந்நியரை கிறிஸ்துவின் குடும்பத்திற்குள் வரவேற்கும் அந்நியராயிருக்கிறோம். சியாட்டிலில் நானும் என் கணவரும் அனுபவித்த உபசரனை, நாங்களும் மற்றவர்களை வரவேற்கக் கற்றுத் தந்தது. இதுவே இருதயத்தில் கிறிஸ்துவின் குடும்பமாயிருத்தல் (ரோம. 12:13).

அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள்

நானும், என்னுடைய குழந்தைகளும் ஒரு புதிய அனுதின பயிற்சியை ஆரம்பித்தோம். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்முன் நாங்கள் பல பென்சில்களை சேகரித்து வைத்து அதில் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைப்போம். தேவனிடம் எங்களுடைய பாதைக்கு வெளிச்சம் தாரும் என்று கேட்டு விட்டு எங்களுடைய நாளிதழில் வரும் படங்களை வரையவும், இரண்டு கேள்விகளுக்கு விடையெழுதவும் ஆரம்பிப்போம். எங்கு நான் என்னுடைய அன்பைக் காட்டினேன்? எங்கு நான் அன்பைக் காட்டவில்லை?

ஆரம்பத்திலிருந்தே, நம்முடைய அயலகத்தாரை நேசிக்க வேண்டுமென்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது (2 யோவா. 1:5). யோவான் தன்னுடைய சபையினருக்கு எழுதின இரண்டாம் கடிதத்தில் கேட்டுக்கொள்வதும் தேவனுக்குக் கீழ்படிந்து ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பதே (2 யோவா. 1:5-6) யோவானுடைய அனைத்துக் கடிதங்களிலும் பிரதானமாகக் காணப்படுவது அன்பு. நாம் உண்மையான அன்பைச் செயல்படுத்தும் போது சத்தியத்திற்குரியவர்களாகின்றோம், அவருடைய பிரசன்னத்தில் வாழ்கின்றவர்களாவோம்
(1 யோவா. 3:18-19) நானும் என் குழந்தைகளும் எங்களைக் குறித்துச் சிந்திக்கும் போது எங்களுடைய வாழ்வில் அன்பு சிறு செயல்களின் வழியே செயல்பட ஆரம்பித்தது. ஒரு குடையை பகிர்ந்துகொள்வது, கவலையோடிருக்கும் ஒருவரைத் தேற்றுவது, அனைவருக்கும் விருப்பமான ஓர் உணவைச் சமைத்தல் போன்ற செயல்களின் வழியே அன்பு செயல்பட்டது. பிறரைப் பற்றி குறைபேசுதல், பகிர்ந்துகொள்ள மறுத்தல், பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்காமல் எங்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றுதல் ஆகியவை நாங்கள் அன்பைச் செலுத்தத் தவறிய கணங்கள்.

ஓவ்வொரு இரவும் நாங்கள் இவ்வாறு செய்யும் போது, ஒவ்வொரு பகலிலும் நாங்கள் கவனமாகச் செயல்பட உதவியாக இருந்தது. எங்களுடைய வாழ்வில் ஆவியானவர் காட்டும் வழியில் நாங்கள் நடக்க எங்களுக்கு உதவியாயிருந்தது. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு நாங்கள் அன்போடு நடக்கக் கற்றுக் கொள்கின்றோம் (2 யோவ. 1:6).